/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எளிதில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?எளிதில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
எளிதில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
எளிதில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
எளிதில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
ADDED : மார் 25, 2010 02:28 AM
கோவை: ""எளிதில் வேலை பெற, நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாணவர்கள் தயார் செய்து கொண்டால் எளிதாக வேலை கிடைக்கும்,'' என, கோவை வேளாண் பல்கலையில் நடந்த வேலை வாய்ப்பு வழிகாட்டல் முகாமில் வேளாண் பல்கலை துணைவேந்தர் பேசினார்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2010ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டல் முகாம், பல்கலையின் மாணவர் நல இயக்குனரகத்தில் நடந்தது.
கோவை வனவியல் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ஜோஸ் மாத்யூ துவங்கி வைத்தார். பல்கலையின் கீழ் உள்ள அனைத்துக் கல்லூரிகளை சார்ந்த 472 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி பேசுகையில், ""வேலை வாய்ப்பு நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அனைத்து முயற்சிகளையும் பல்கலையின் மாணவர் நல இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது.வேளாண் பல்கலை பட்டதாரிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.
இங்கு படித்த மாணவர்கள் அனைத்து துறைகளிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்திய ஆட்சிப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ""இங்கு படித்த மாணவர்களில் 80 பேர் வெளிநாடுகளில் மேற்படிப்பை தொடர் கின்றனர். மேலும் 37 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்,'' என்றார்.மாணவர் நல இயக்குனர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,""ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த வேலை வாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சியின் மூலம், 2009ம் ஆண்டு வரை 1,452 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாணவர்கள் தகுதியையும் தகவல் பரிமாற்றத்தில் திறமையும் பெற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன,'' என்றார்.இந்நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலைகள், வேளாண் இடுபொருள் நிறுவனங்கள், எச்.டி.எப்.சி. வங்கி, வேளாண் அறிவியல் நிலையங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட மொத்தம் 24 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உயர்கல்வி, வேலை வாய்ப்புகள், சுயதொழில் துவங்குவதற்கான வழிமுறைகள், நேர்முக தேர்வு, குழு கலந்துரையாடல் முறையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் விளக்கினர்.மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் எழுத்துத் தேர்வு,நேர்முக தேர்வுகள் மூலம் மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உயிர் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளை சேர்ந்த 287 மாணவர்கள் தேர்வு பெற்றனர். இரு நாட்கள் நடந்த முகாமில், 93 மாணவர்களுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டது.